தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம் - பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்தை அறிவுறுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்டு மாதம் தமிழகத்தின் நிதி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில் 5 பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நிலை மிக மோசமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ரூ.1.34 லட்சம் கோடியும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.25,568 கோடியும் ஆக மொத்தம் ரூ.1.60 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் 3.10 கோடிக்கும் கூடுதலான மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.
இதில் 90 சதவீத பயனீட்டாளர்கள் பகுதியாகவோ, முழுமையாகவோ இலவச மின்சாரத்தை பெற்று வருகின்றனர். அதாவது 100 யூனிட் வரை அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. விவசாய பயன்பாடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றை ஈடு செய்து மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்டு கொண்டுவர ஒவ்வொரு அரசும் முயற்சி எடுத்து வந்தாலும் தொடர்ந்து மின் வாரியம் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் மின்வாரியம் கடனில் இருந்து மீண்டு வருவதற்கு மின் கட்டணத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் மாற்றி அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன்படி 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் தற்போது வரை மின் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு - பல்வேறு பிரச்சினைகளால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்கள் மீது மின் கட்டணத்தை உயர்த்தி, மேலும் அவதிக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மின் வாரியத்தின் கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்?
மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றாலும் அதற்கு மக்கள் பொறுப்பல்ல. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல்செய்வது, பராமரிப்பதில் நிர்வாகச் சீர்கேடு போன்ற பல்வேறு அம்சங்களில் நிலவும் கேடுகெட்ட ஊழல் போன்றவையே காரணங்களாகும்.
சங்கப் பிரதிநிதிகள், தனியார் மைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், வாரியத்தில் நிலவும் ஊழல்களைக் களைவது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கி மின் வாரியத்தை கடனிலிருந்து மீட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.