2021-22 ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தேதியை இரண்டாவது முறையாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய வருமானவரித்துறை போர்ட்டல் இணையதளத்தில் வருமான வரி தாக்கல் செய்வதில் தொடர்ந்து பயனாளர்களுக்கு சிரமம் நிலவி வந்தது.வரி செலுத்துவோர் வருமான வரி அறிக்கையை முழுமையாகத் தாக்கல் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அவர்களின் நிலையை உணர்ந்த மத்திய நேரடி வருமான வரித் துறை மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரையில் கால அவகாசம் அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் மத்திய நிதியமைச்சகம் மற்றும் புதிய வருமான வரித் தளத்தை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனமிடையே நடந்த முக்கியமான கூட்டத்தில், புதிய தளத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தீர்க்க உள்ளதாக இன்போசிஸ் உறுதியளித்தது. இந்த கால நீட்டிப்பு பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மத்திய அரசு 2020-2021ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யச் செப்டம்பர் வரையில் கால நீட்டிப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.