இந்திய வரலாற்றில் முதன் முறையாக : 9 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு!
உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து 9 நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 34 என்ற நிலையில், சமீபத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு பெற்றதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 24-ஆக குறைந்தது.
இந்த நிலையில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி பணியிடங்களுக்கான பெயா்களை இறுதி செய்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பெயா்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி 9 நீதிபதிகளையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதன்படி, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அபை ஸ்ரீநிவாஸ் ஒகா, குஜராத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமாா் மகேஷ்வரி, தெலங்கானா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகா்த்தனா, கேரள உயா்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமாா், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
Delhi: Nine judges -- Justices AS Oka, Vikram Nath, JK Maheshwari, Hima Kohli, BV Nagarathna, CT Ravikumar, MM Sundresh, Bela M Trivedi & PS Narasimha -- take oath as Supreme Court judges
— ANI (@ANI) August 31, 2021
(Photo - Supreme Court) pic.twitter.com/fWeB4HIJF9
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, 9 நீதிபதிகளுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
9 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 9 நீதிபதிகள் ஒரேநேரத்தில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.