தீர்ந்தது இம்சை அரசன் பிரச்சனை - மீண்டும் திரையுலகில் வடிவேலு..!

Vadivelu \ImsaiArasan24amPulikecei
By Petchi Avudaiappan Aug 27, 2021 05:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படம் தொடர்பான விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் - வடிவேலு இருவருக்கும் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு ஹீரோவாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’. இதன் 2ஆம் பாகம் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்ற பெயரில் தயாரானது.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே கதையில் வடிவேலு தலையிடுவதாக இயக்குனர் சிம்புதேவனுடன் மோதல் நிலவி வந்த நிலையில் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழு புகார் அளித்தது. பிறகு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது.

கிட்டதட்ட 10 ஆண்டுகள் வடிவேலு இல்லாத படங்களே வெளியானதால் அவரது ரீ-எண்ட்ரி எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனிடையே இந்த தயாரிப்பாளர்கள் சங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் ஷங்கர் - வடிவேலு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், சுமுகமாக எந்தவொரு முடிவுமே எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் '23-ம் புலிகேசி 2' திரைப்படத்தில் நடித்த வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேசி மேற்கண்ட பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வடிவேலு மீண்டும் முழுவீச்சில் இனி திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.