பாகிஸ்தானில் கட்சி மாறிய துணை சபாநாயகர் - அடிவெளுத்த இம்ரான் கான் கட்சி எம்.பி.க்கள்
பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையின் துணை சபாநாயகர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது 2வது முறையாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் இளைய சகோதரர் ஆவார்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் பஞ்சாப் சட்டசபை கூடியது. அப்போது இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் எம்பிகள் துணைச் சபாநாயகர் தோஸ்த் முஹம்மது மஜாரியை தாக்கினர். பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க சட்டசபை கூடிய போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில் அவை காவலர்கள் துணைச் சபாநாயகரைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் முன்பு, இம்ரான் கான் கட்சியினர் அவரை தாக்கும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி உள்ளது.
அதாவது பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இம்ரான் கான் கட்சியின் முஹம்மது மஜாரி துணைச் சபாநாயகராக இருந்தார். ஆனால் அங்கு அரசியல் குழப்பம் அதிகரித்த பின்னர், மஜாரி மற்றும் 24 எம்.பி.க்களும் இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பினர். இதனால் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.