பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான் : புதிய பிரதமர் இவர்தான்..!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் அவர் தனது பதவியை இழந்தார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியான நேற்று இரவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.
நள்ளிரவு 1.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்தா நவாஸ் ஷெரீப் சகோதரர் ஆவார்.