பாகிஸ்தானில் முடிவுக்கு வந்தது இம்ரான் கான் ஆட்சி - நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி
பாகிஸ்தானில் நள்ளிரவில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இடைக்கால பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சி குறைவான வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டது. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்தார்.
மேலும் இடைக்கால பிரதமராக இம்ரான் கான் செயல்படுவார் என்றும், அங்கு 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறும் அரசியல் குழப்பத்தால் அங்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதியான நேற்று இரவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.
இந்த நிகழ்வில் பாகிஸ்தான் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தெஹ்ரிக் கட்சி எம்.பிக்கள் பலரும் அவைக்கு வரவில்லை. இதனால் 3 மணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது. 4:30 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் இம்ரான் கான் கலந்துகொள்ளவில்லை. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் எனில், அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் கால் பங்கு உறுப்பினர்கள் அவைக்கு வர வேண்டும்.
ஆனால் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அவைக்கு வராதது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாமதப்படுத்தவே என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் 342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 174 பேர் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் இம்ரான் கான் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் சபாநாயகர் பொறுப்பிலிருந்து அசாத் கெய்சர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.