“அரசை தாண்டி நீதிமன்றத்திற்கு தார்மீக கடமை இருக்கிறது” ; ஹிஜாப் சர்ச்சை - கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவ மாணவிகள் காவி துண்டு மற்றும் ஷால் அணிந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கி அங்கும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமறத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள ஜூனியர் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான விசாரணை இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், "நாங்கள் பகுத்தறிவின்படியும் சட்டத்தின்படியும் தான் செல்வோம், உணர்ச்சிகளால் அல்ல. அரசியலமைப்பின்படி தான் நாங்கள் செயல்படுவோம். அரசியலமைப்பு தான் எங்களுக்கு பகவத் கீதை" என தெரிவித்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் ஆஜராகி வாதிட்டார்.
அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள் இவை:
“பொதுவாக ஒரு மாநிலத்தின் ஆளும் அரசானது எந்த ஒரு மத வழக்கத்தையும் பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி மத நடைமுறைகளில் சிலவற்றை தடுத்து நிறுத்திவிட முடியும்.
ஆனால் நீதிமன்றம் அப்படியல்ல, இதுப்போன்ற பரபரப்பான சமயங்களில் சரியான முடிவை எடுப்பதுதான் நீதிமன்றத்தின் தார்மீக கடமை.
இந்த வழக்கில் மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து செல்வது பொது ஒழுங்கு பிரச்சினை என்றால், கல்லூரிக்கு வெளியில் பாதிப்பு ஏற்படாத நிலையில் கல்லூரிக்குள் நுழையும்போது மட்டும் பொது அமைதி எப்படி பாதிக்கப்படும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் காமத், நான் ஒரு பிராமணன், என் மகன் பள்ளிக்கு நாமம் இட்டு செல்கிறான். இந்த செயல் பொது ஒழுங்கை பாதிக்கிறது என்று பள்ளி நிர்வாகம் சொல்ல முடியுமா?
அதே போல்தான் மனுதாரர்கள் ஹிஜாப் அணிந்து யாருக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை.
அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மையை நாம் இங்கு பின்பற்றுவதில்லை. அங்கு மத நடவடிக்கைகளில் இருந்து அரசு முற்றிலும் விலகி நிற்கிறது.
ஆனால் இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது வேறு. நாம் நேர்மறை மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறோம். இங்கு நாம் மாணவர்களுக்கு நாமம், ஹிஜாப் அல்லது சிலுவை அணிய அனுமதிக்கிறோம்.
But here we allow students to wear Namam, hijab or cross: Kamat.
— Bar & Bench (@barandbench) February 8, 2022
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால்: 1. ஹிஜாப் அணிவது இஸ்லாமியத்தில் பின்படுத்தப்படும் முக்கிய நடைமுறையாகும் 2. பொது ஒழுங்கின் அடித்தளம் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றாது;
3.பொது ஒழுங்கைப் பராமரிக்க வேண்டியது மாநிலத்தின் நேர்மறையான கடமை; அது இந்த விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது,
அதற்காக குடிமக்களை பிரிவு 25-ன் கீழ் வரும் உரிமைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்ல முடியாது என மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் வாதிட்டார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரத்தினை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கினை நாளை மதியம் 2.30 மணி வரை ஒத்தி வைத்துள்ளது.