ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருவதால் பல முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டன.
இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பு உள்ளதை உறுதி செய்யவும், ஆக்சிஜன் வீணாவதை தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்று தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்குவித்து, தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கப்படும்.
கொரோனாவால் ஏற்படும் உயிரழப்புகளை குறைத்து ஒரு உயிர் கூட போகாமல் இருக்கின்ற நிலையை உருவாக்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.