வீடு இடிந்து விபத்து - தமிழக அரசு ரூ.1 லட்சம் நிவாரணம்

MKSTALIN tiruvottiyur collapsing
By Irumporai Dec 27, 2021 07:40 AM GMT
Report

சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை விரிசல் அதிகமாகி திடீரென குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. முன்கூட்டியே குடியிருப்பு வாசிகள் வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் இழப்புகள் தவிர்ப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று காவல் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ,இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தால் 1993 இல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில், 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து ,அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.

திருவொற்றியூர் விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களை சேகரிக்கும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.