டிசம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
டிசம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல்
கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது. இதன் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
டிசம்பரில் அதிக மழை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் அளவிற்கு அதிக கனமழை கொட்டி உள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மழை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் மாதம் இயல்பை விட 31% அதிக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிகமாக மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.