கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய் - காதலனுடன் கைது

nagai illegalrelationship childmurder
By Petchi Avudaiappan Sep 30, 2021 06:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 நாகையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே உள்ள குன்றத்தூரை சேர்ந்த அபிராமி, பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலில் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற சம்பவம் 2018 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கியது. அந்த பாணியில் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

நாகை மாவட்டம் மேலவாஞ்சூா் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் அரவிந்துக்கு அபர்ணா என்பவருடன் திருமணமாகி 4 வயதில் குழந்தை ஆண் ஒன்று உள்ளது. காா்த்திக் அரவிந்த் சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி வேலை பாா்த்து வருகிறாா். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அபர்ணா தனியாக வசித்து வருகிறார்.

இதனிடையே அவருக்கு சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநருடன் பழக்கம் ஏற்பட்டு காடம்பாடி சூரியா நகரில் குடும்பம் நடத்தி வந்தாா். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி சிறுவன் மா்மமான முறையில் இறந்து கிடந்தான்.இதுகுறித்து தகவலறிந்த காா்த்திக் அரவிந்த் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் அபர்ணா, சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அபர்ணா, சுரேஷ் இருவரும் தனிமையில் இருந்த போது கவித்திரன் இடையூறு செய்ததால் அவனை அபா்ணா துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததும், சிறுவன் தானாகவே இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்ய முயன்றதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசாா் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அபர்ணா, சுரேஷ் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர். தற்போது இருவரும் நாகை சிறையில் உள்ளனர். இந்த நிலையில் சிறுவனை கழுத்தை நெரித்து கொன்ற அபர்ணா, சுரேஷ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அபர்ணா, சுரேஷ் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர். இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.