இசை நுணுக்கங்களை அப்பா கற்றுத்தர மாட்டார் - கார்த்திக் ராஜா

Tamil Cinema Ilayaraaja Karthik Raja
By Thahir Aug 29, 2022 01:13 PM GMT
Report

தனக்கு தன் தந்தை இசை நுணுக்கங்களை கற்றுத்தந்ததில்லை என அவரது மகன் கார்த்திக் ராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இசை நிகழச்சி 

திருச்சியில் வரும் செப்டம்பர், 24ம் தேதி "பொன்மாலை பொழுது" என்கிற இசை நிகழ்ச்சியை இளையராஜாவின் மூத்த மகன் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா நடத்த உள்ளார்.

இது தொடர்பாக, திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் ராஜா, கோலாலம்பூரில் ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறேன். அதே போல, மதுரையில் சங்கீத திருவிழா என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன்.

Karthik Raja

அதற்கடுத்து தற்பொழுது திருச்சியில் முதல் முறையாக மிகப்பிரமாண்டமான முறையில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறேன். இந்நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில், இளையராஜா மற்றும் எனது திரைப்படப் பாடல்கள் இசைக்கப்படும். ராயல்டி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக யுவன்சங்கர் ராஜா பாடல்கள் இசைக்கப்படாது.

இந்திய அளவில் பிரபலமான ஹரிஹரன், சாதனா சர்கம் பங்கேற்றாலும் ஹிந்திப் பாடல்கள் பாடப்படாது. தமிழ் பாடல்கள் மட்டுமே இசைக்கப்படும். எனது தந்தை இளையராஜா பயன்படுத்துவது போல வெளிநாட்டு கலைஞர்களை இந்த இசை நிகழ்ச்சிக்கு பயன்படுத்த மாட்டேன். உள்ளூரில் உள்ள கலைஞர்களை வைத்தே அதே தரத்துடன் வழங்குவோம்.

எனக்கு கற்றுத்தரவில்லை 

ஏற்கனவே, எனது தந்தை இதுபோன்று வெளிநாட்டு கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தும் பொழுது நடக்கும் ரிகர்சலுக்கு என்னை தான் நியமிப்பார். அப்போது அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களை கற்றுத் தெரிந்திருக்கிறேன்.

அதை கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்துவேன். எனது தந்தை எனக்கு இசை நுணுக்கங்கள் எல்லாம் கற்றுத் தந்ததில்லை. 'மற்றவர்களுக்கெல்லாம் சொல்லித் தருகிறீர்கள். எனக்கு ஏன் சொல்லித் தர மாட்டீர்கள்?' என்று அவரிடம் நான் நேரடியாகவே கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர் நீ கற்பூரம் மாறி கற்றுக்கொண்டு அதில் இருந்து நீ எனக்கு ஒரு கேள்வி கேப்பா என்றார்.

Karthik Raja

ஒருமுறை 'ஆல்பம்' திரைப்படத்திற்காக 'செல்லமே செல்லம் என்றாயடி' என்ற பாடலுக்கு கம்போசிங் செய்து கொண்டிருந்தேன்.

அப்போது எனது தந்தை ஸ்டியோவுக்குள் வந்திருக்கிறார் அதை நான் கவனிக்கவில்லை. அந்த பாடல் வரிகள், 'செல்லமே செல்லம் என்றாயடி.. அத்தான் என்று சொன்னாயடி..' என்று பாடலின் இறுதியில் வரும். அதை காதில் கேட்ட எனது தந்தை, என்னை தனியாக அழைத்து, அது என்ன நாயடி.. நாயடி..? என்று பாடல் கேட்கிறது என்றார்.

உடனே நான் அவரிடம் நீங்கள் ஏற்கனவே விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஒன்றுக்கு இதேபோல தான் நீங்கள் ஒரு பாட்டு போட்டு இருக்கிறீர்கள் என்றேன். அதுக்கு அவர் என்னை "ஏய்.." என்றார். அதற்குமேல் அவரிடம் பதில் எதுவும் எதிர்பார்க்க முடியாது.

யுவன் சங்கர் ராஜா போன்று உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, "மிகப்பெரிய இயக்குனர்கள், மிகப்பெரிய நடிகர்களுடன் வேலை செய்தால் மிக வேகமாக வளரலாம்.

அதிக புகழ்ப் பெறலாம் என்பது ஒரு உண்மைதான். ஆனால் நான் யாரை பார்த்தும் வருத்தப்பட்டது இல்லை. யாருக்கு எந்தெந்த நேரத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கடவுள் விதித்திருக்கிறானோ அந்த நேரத்தில் அது கண்டிப்பாக நடக்கும்.

நான் இப்பொழுது திருச்சியில் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பமாக இருக்கிறது. அதை நான் செய்கிறேன். தாமதமாக கிடைத்தாலும் கண்டிப்பாக எனது என்னுடைய வாய்ப்பு எனக்கு கிடைத்தே தீரும்.

அதுவரை எனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். தற்போது, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில், 12 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்" என்றார்.