விண்வெளியிலும் இசைக்கப் போகும் இளையராஜாவின் பாடல் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பூமியை தாண்டி இனி விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். பலரின் துன்பங்களுக்கு மருந்தாக இருப்பது இசையின் நாயகன் அவரின் இசை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனிமை, அழுகை, மகிழ்ச்சி என எந்த மனநிலையில் இருந்தாலும் இவரின் இசை நம்மை வசீகரிக்கக் கூடியது.
அப்படியான இசைஞானியின் இசை இனி பூமியைத் தாண்டி விண்ணிலும் ஒலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாசா உதவியுடன் உலகின் மிக குறைவான சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, இதனுடன் பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்தது. இதனையடுத்து அவர்கள் இசைஞானி இளையராஜாவிடம் பேசி அவரது பாடலை சாட்டிலைட்டில் ஒலிக்க ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.