‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடலின் ரகசியத்தை பகிர்ந்த இளையராஜா

Ilayaraja yuvanshankarraja MMK PerVachaalumHits10MillionViews
By Petchi Avudaiappan Sep 20, 2021 11:51 PM GMT
Report

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான விதம் குறித்த தகவலை இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு கமல் 4 வேடங்களில் நடித்து சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படம் இன்றளவும் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் முதன்மையானதாக உள்ளது.

இப்படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் அடித்தன. குறிப்பாக கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடிய ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் தமிழக மக்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இப்பாடல் நடிகர் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவால் ரீமேக் செய்யப்பட்டது.

பாடலின் ஒரிஜினல் இசைக்கு மேல் சிறிது மாற்றம் செய்து மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலிலேயே இப்பாடல் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை யூடியூபில் கடந்துள்ள நிலையில் ’மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில், இப்பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பகிர்ந்துகொள்ளும் வீடியோவை யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ’சிங்கீதம் சீனிவாசராவும் கமல் சாரும் இப்பாடல் கம்போசிங்கிறாக வந்து அமர்ந்தார்கள். வாலி அண்ணனும் இருந்தார். நான் இப்பாடலை ‘டட்டாட்ட டட்டாட்ட டட்டாட்ட டடடாட்ட’ என்றேன். ”என்னாயா இப்படி போடுற. இந்த மாதிரி சந்தம் எல்லாம் கொடுத்தா எப்படிய்யா எழுதறது?” என்று கேட்டார் வாலி அண்ணன். ’இது ஏற்கனவே எழுதனதுதாண்ணே’ என்றேன். ‘அப்படியா யாருய்யா எழுதினது’ என்று கேட்டார்.

வள்ளுவர் எழுதிட்டுப் போயிருக்கார் என்றுக்கூறி ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’ என்று பாடிக்காட்டி இதுதான் சந்தம் என்றேன். அதன்பிறகுதான் வாலி அண்ணன் ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’என்று எழுதினார். இந்தத் தகவலை உற்சாகத்துடன் இளையராஜா பகிர்ந்துகொண்டுள்ளார்.