அம்பேத்கரையும், மோடியையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் கிடையாது - எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து
சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இளையராஜாவின் இந்தக் கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில், இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டிருந்தார். இதனால், சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
சமீபத்தில் தன்னைப் பற்றி நூலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இன்னும் 10 - 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை நரேந்திர மோடியிடம் உள்ளது. எனவே, அம்பேத்கரையும் மோடியையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் கிடையாது என்பது என் தனிப்பட்ட கருத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.