கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் டிவி, பிரிட்ஜ் பரிசு - குவிந்த மக்கள் கூட்டம்
சங்கரன்கோவிலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பலர் ஆர்வமுடன் வந்து செலுத்திக்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொதுமக்களில் சிலர் அச்ச உணர்வில் போட்டுக்கொள்ள மறுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அறக்கட்டளை சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்வமுடன் குவிந்த மக்கள் பரிசுப்பொருட்களையும் பெற்றுச் சென்றனர்.