ஜெயிக்க வச்சா விஜயகாந்தை காட்டுவோம்..! வாக்காளர்களுக்கு டிமாண்ட் வைத்த பிரேமலதா
தேமுதிகவை வெற்றி பெற வைத்தால், பழைய விஜயகாந்தை மீண்டும் நீங்கள் பார்க்க முடியும்' என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்களர்களுக்கும், கட்சியினருக்கும் டிமாண்ட் வைத்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் பொருளாளரும், நடிகர் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில் பிரேமலதா பேசியதாவது: இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும். இதே ஈரோடு மண்ணில்தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கில், எங்கு பார்த்தாலும் துணை ராணுவப்படையினர் நிற்கிறார்கள். இவர்களுக்கு இந்த தொகுதியப் பற்றியும் தெரியாது. வாக்காளர்கள் சொல்வதை புரிந்து கொள்ள தமிழ் மொழியும் தெரியாது.
தேர்தல் விதிமீறல் குறித்து அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. இத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வயதாகிவிட்டது. எங்கள் வேட்பாளரை போல இளமையானவர் இல்லை.
இளமையான எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால், இந்த தொகுதி பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதிமுக எம்.எல்.ஏ வாக இருந்த தென்னரசு, இந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
சுமைதூக்கும் தொழிலாளர்கள் உரிய கூலி அளிக்கப்படவில்லை. அதிமுக வேட்பாளர் அந்த சங்கத்தின் தலைவராக இருந்தும் சுமை தூக்கும் தொழிலாளர் கஷ்டத்துக்கு எந்த தீர்வும் அவர் கொடுக்கவே இல்லை.
எடப்பாடி பழனிசாமியை பார்த்து யாராவது நல்லவர் வருகிறார் என்று சொல்வார்களா? ஆனால் கேப்டனை பார்த்து சொல்வார்கள்.
விஜயகாந்த் என நினைத்து வாக்களியுங்கள்
ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர், 'நீ ஆம்பளையா இருந்தா, வேஷ்டி கட்டுன ஆம்பளையா இருந்தா, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா' என என்ன என்னமோ 'டயலாக்' பேசிக்கொண்டு இருக்கிறார்.
விஜயகாந்த் நலமாக இருக்கிறாரா என மக்கள் அனைவரும் கேட்கின்றனர். அவர் நலமாக இருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் கொடுக்கும் வெற்றி, அவருக்கு 100 ஆண்டு தெம்பைக் கொடுக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறார்.
இந்த தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்றால், பழைய விஜயகாந்தாக அவர் வந்து நிற்பார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சாயப்பட்டறை கழிவுநீரால் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. சாலை வசதி, சாக்கடை வசதி இல்லை.
எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால், ஈரோடு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, சுகாதாரமான குடிநீரை வழங்குவார். எனவே, இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடுவதாக நினைத்து, நீங்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.