அதிமுகவினரை தொட்டால் கையை உடைப்பேன் - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைப்பது, அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகை அளிப்பது, வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை தாங்கி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதேபோல் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுகவினர் மீது குட்கா, கஞ்சா, கந்துவட்டி எனபொய் வழக்குகளை போடுகின்றனர். கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பேன். கட்சிக்காரனைத் தொட்டால் கையை உடைப்பேன் என்று கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஜனவரியில் உதயநிதி அமைச்சர், அதன் பிறகு துணை முதல்வர், அதன் பிறகு முதல்வர் என்று பேசிய அவர் 'ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் திமுகவினர் கவனம் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.