வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதமாக குறைத்தது ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை 6.7 சதவீதமாக குறைத்தால் கடந்த 10 வருடங்களில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதத்தை அந்த வங்கி அமல்படுத்தியிருக்கிறது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தப் புதிய வட்டி விகிதம், வங்கியில் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தும்.
ரூ.75 லட்சத்திற்கு மேலாக கடன் வாங்கியவர்களுக்கு வட்டிவிகிதமானது 6.7 சதவீதத்திலிருந்து தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்கடனுக்கான இந்த வட்டி விகிதமானது இன்று முதல் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்திருக்கிறது. முன்னதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை குறைத்தது.
இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் இந்த வட்டி விகித குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது. இது குறித்து ஐசிஐசிஐ வங்கியின் தலைமை சொத்துப் பிரிவு அதிகாரி ரவி நாரயணன் கூறியதாவது - 'கடந்த சில மாதங்களாக நுகர்வோர்களின் வீடு வாங்க வேண்டும் என்ற தேவை மேலோங்கி இருந்ததை நாங்கள் அறிந்தோம்.
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கோடி வரை வங்கிக்கடன் வழங்கிய தனியார் வங்கி என்ற பெருமையை ஐசிஐசிஐ வங்கி பெற்றிருக்கிறது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.