ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அசுர வளர்ச்சி கண்ட இந்திய வீரர்கள்
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த தொடர் முடிந்து புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்ட அதே வேளையில் புதிய தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் மயங்க் அகர்வால் 11வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 150, 62 என ரன்களை குவித்த மயங்க் அகர்வால், தரவரிசையில் 41ஆவது இடத்தில் இருந்து 11ஆவது இடத்திற்கு வேகமாக உயர்ந்துள்ளார்.
இந்த பட்டியலில் ஜோ ரூட் 903 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 5வது இடத்திலும் விராட் கோலி 6வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்களின் தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக கலக்கிய இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 883 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பௌலர் அஜாஸ் படேல் 62ஆவது இடத்தில் இருந்து 38ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் 382 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 360 புள்ளிகளை பெற்று 2வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். ஏற்கனவே 2வது இடத்தில் இருந்த ஜடேஜா தற்போது 4வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார்.