ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்த இந்திய அணி

India Test ICC Ranking Slips
By Thahir Jan 21, 2022 04:37 AM GMT
Report

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் சரிவை சந்தித்திருக்கிறது இந்திய அணி. ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் இரண்டு முடிவுற்ற பிறகு, ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடையச் செய்து, டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பை புள்ளி பட்டியலிலும் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது.

அத்துடன் மட்டும் நிற்காமல், ஐசிசி தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது. 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது.

தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்ற பிறகு தொடரை கைப்பற்றி விடும் என எதிர்பார்த்த நிலையில் 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்க அணி தனது வரலாற்றை தக்கவைத்துள்ளது.

இதன் காரணமாக தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. ஏற்கனவே 5வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்தில் இருக்கிறது.

வங்கதேச அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை இழந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை பெற்றதால் நியூசிலாந்து அணி 117 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்திருக்கிறது. முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 116 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்து இருந்தாலும், இங்கிலாந்து அணிக்கு புள்ளிகள் மட்டுமே குறைந்திருக்கிறது.

தரவரிசை பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 101 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் 10 இடங்களுக்குள் இருக்கின்றன.

இவர்களின் தரவரிசை பட்டியலில் எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. புள்ளிகளும் பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை.

ஆஷஸ் தொடரின் போது, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியை மீண்டும் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு கொண்டு வந்ததால் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.