பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா - தெறிக்கவிடும் டி20 உலகக்கோப்பை அட்டவணை
7வது டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை இந்த உலகக்கோப்பை தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். கொரோனா சூழல் காரணமாக ஒவ்வொரு அணியும் "பயோ பபுள்" பாதுகாப்பு நடைமுறையை கடைபிடிக்க இருக்கிறது.
இதன் காரணமாக அதன்படி ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுடன் மட்டுமே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது. தகுதிச்சுற்றில் ஓமன்,பபுவா நியூ கினியா, அயர்லாந்து, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா, இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளது.
இப்போட்டிக்கான அட்டவணையில் அக்டோபர் 24ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடனும், அக்டோபர் 31 ஆம் தேதி நியூசிலாந்துடனும், நவம்பர் 3 ஆம் தேதி ஆப்கானிஸ்தானுடனும், நவம்பர் 5ஆம் தேதி பி பிரிவில் முதலிடம் பெற்ற அணியுடனும், நவம்பர் 8 ஆம் தேதி ஏ பிரிவில் 2 ஆம் இடம் பெற்ற அணியுடனும் மோதுகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.