ஐசிசி பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளிய பாகிஸ்தான் வீரர்
ஐசிசியின் புதிய தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 873 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் குவித்தது இதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதேசமயம் ஒருநாள் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த விராட் கோலி 857 புள்ளிகளும் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணி துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 3வது இடத்தில் உள்ளார். மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சை பொறுத்தவரை நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக வங்கதேச வீரர் மெகிடி ஹசன் 713 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், கிறிஸ் வோக்ஸ் 711 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 690 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.