12th Fail: பெற்றோர் கூட நம்பிக்க வைக்கல; ஆனால் என் நண்பன்.. - நெகிழ்ந்த IAS அதிகாரி!
வனிஷ் சரண் என்ற சத்தீஸ்கர் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் எக்ஸ் தள பதிவு வைரலாகி வருகிறது.
12th Fail
மனோஜ் குமார் ஷர்மா என்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்திய எடுக்கப்பட்ட படம்தான் `12th Fail'. இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பெரும் வெற்றியடைந்த இந்தப் படம், தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வனிஷ் சரண் என்ற சத்தீஸ்கர் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி, தனது எக்ஸ் எக்ஸ் பக்கத்தில் "ஒவ்வொரு வெற்றி பெற்ற நபருக்குப் பின்னாலும், 12-th Fail திரைப்படத்தில் கதாநாயகனுக்கு உதவும் ப்ரீதம் பாண்டே போல ஒருவர் உண்டு.
நான் UPSC தேர்வுக்குத் தயாரானபோது, முகர்ஜி நகர் தெருக்களில் அறை தேடி அலைந்தேன். அந்தச் சூழலில்தான் என் பாண்டேவைச் சந்தித்தேன். அவன் பெயர் 'தேவ்'.
உருக்கமான பதிவு
என்னை ஒரு கோச்சிங் வகுப்பில் சந்தித்தான். நான் தங்குவதற்கு அவனது அறையில் இடம் கொடுத்தான். மெயின் தேர்வு நேரத்தில் எனக்கு 103-104 டிகிரி காய்ச்சல். கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்.
தேர்வு எழுத முடியாத நிலை. அப்போது தேவ் என்னை ஆட்டோவில் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்வான். அனைத்துத் தேர்வுகளின்போதும் தோல்பூர் தேர்வு மையத்துக்கு வெளியே நிற்பான். எனக்கு உணவூட்டுவான். எனது தேர்வு முடிவு மே 4-ம் தேதி வெளியானது. அன்றும் என் பாண்டே (தேவ்) என்னுடன்தான் இருந்தான்.
எனது தேர்வு முடிவுகள் குறித்து எனது பெற்றோர்கூட அவ்வளவு நம்பிக்கை என்மீது வைக்கவில்லை. ஆனால், தேவ் என்னைவிட என்மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தான்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.