மகளிர் உரிமைத் தொகை உயர்கிறதா? அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட்
பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் என பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை முகஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதில், பெண்களுக்கு வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயனாளிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
2023 செப்டம்பர் 15 முதல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், மாதம் தோறும், தகுதியுடைய பெண்களுக்கு ரூ.1000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், 1.13 கோடி பெண்கள் உரிமைத்தொகையை பெற்று வந்த நிலையில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டு தற்போது சுமார் 1.30 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் உரிமைத்தொகை பெற்று வருகிறார்கள்.

இதில் விடுபட்ட பெண்களையும் திட்டத்தில் இணைக்க வேண்டும் மற்றும் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, உரிமைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பெண்களின் வாக்குகளை கவரும் வகையில், உரிமைத்தொகையை உயர்த்தி வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பெரியசாமி கொடுத்த அப்டேட்
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மகளிர் உரிமைத் தொகை ரூ.500 அல்லது ரூ.1000 உயர்கிறதா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.