எனக்கு தமிழ் தான் தெரியும்...நான் தமிழில் தான் பேசுவேன் - நடிகர் சிவகார்த்திகேயன்..!

Sivakarthikeyan
By Thahir May 07, 2022 05:05 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் டிரைலர் நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அனிருத் காம்போவில் இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் அனைத்தும் வழக்கம்போல் ஹிட் அடித்துள்ளன.

படம் மே 13-ம் தேதி வெளியாகவுள்ளதால், படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.

நேற்றைய டான் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயம் இளம் இயக்குநர்கள் குறித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று இல்லை அதற்கு பின் நிறைய வியாபார காரணங்கள் இருக்கு.

ஒவ்வொரு முடிவும் கற்பனையை மட்டும் நம்பி எடுக்க முடியாது வியாபாரம் சம்பந்த பட்டு தான். வியாபார ரீதியாக அறிமுக இயக்குநர்களின் படங்கள் வெற்றியடையும் போது இன்னும் நிறைய பேர் இது மாதிரியான படங்கள் பண்ண முடியும் என்றார்.

நேற்றைய டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவின் டான் சிவகார்த்திகேயன் என்று சொன்னது குறித்த கேள்விக்கு அவர் ஜாலியாக சொன்னது என்று கூறினார்.

மேலும் இந்தி திணிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,எனக்கு தமிழ் தான் தெரியும்,நான் தமிழ் தான் பேசிட்டு இருக்கேன் என்றார்.