நான் அரசியலில் மௌன விரதத்தை கடைபிடிக்கிறேன் - எஸ்வி சேகர்
பிரபல நடிகர் எஸ்வி சேகர் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் அரசியலில் மௌன விரதத்தை கடைபிடிக்கிறேன்.
மீண்டும் அரசியலுக்கு வர தயார்
என்னை அரசியலுக்கு அழைத்தால், பணிசெய்து பணி செய்ய எப்போதும் தயாராகவே இருக்கிறேன். நான் சார்ந்துள்ள கட்சி என்னை அழைத்தால் அவர்களுக்கு லாபம். அவர்கள் என்னை அழைக்கவில்லை என்றால் எனக்கு ஏதும் நஷ்டமில்லை.

அரசியலில் ஒருவர் கருத்து சொன்னால் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர் சார்ந்த கட்சி தான் அவருக்கு அரணாக இருக்க வேண்டும்.
அடுத்த 2024 பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மோடிதான் பிரதமர் ஆவார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இளம் தலைவராக இருந்தும் திறமையாக செயலாற்றுகிறார்.
அவருக்கு பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்றுவது அனைவருக்கும் சுதந்திர உணர்வை கொடுக்கும்.
இந்தியாவை போன்ற ஒரு சுதந்திர நாடு எங்குமே இல்லை. அந்த அளவிற்கு மக்களுக்கு சுதந்திரத்தை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.