சென்னை அணியை விட்டு விலகுகிறேனா? - தோனியின் முடிவு இதுதான்
பிசிசிஐ எடுக்கும் முடிவை பொறுத்து ஐபிஎல்லில் தனது எதிர்காலம் அமையும் என சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டன் தோனியின் தலைமையிலான சென்னை அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனிடையே கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூபாய் 20 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதனை அணியின் சார்பில் கேப்டன் தோனி பெற்றுக் கொண்டார்.
ரசிகர்களிடையே பேசிய அவர், “சென்னை அணி பற்றி பேசுவதற்கு முன் கொல்கத்தா அணியைப் பற்றி பேச வேண்டும். இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த அணி என்றால் அது கொல்கத்தா தான். அவர்களது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறினார்.
அப்போது அவரது எதிர்கால திட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் 2 புதிய அணிகள் வர உள்ள நிலையில், பிசிசிஐ எடுக்கும் முடிவை பொறுத்து எனது எதிர்கால திட்டம் அமையும் என்று பதிலளித்தார்.
மேலும் சென்னை அணியுடன் அவரது எதிர்கால தொடர்பு எவ்வாறு இருக்கும் என தோனியிடம் கேட்ட போது, சென்னை அணிக்காக நான் விளையாடுவது என்பதை விட, சென்னை அணிக்கு எது சிறந்தது என்பதை தான் பார்க்க வேண்டும் என்றார். சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற வரலாறு குறித்து பெருமைப்படுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய போது,நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என்று சிரித்துக் கொண்டே கேப்டன் தோனி பதிலளித்தார்.