மாநாடு படத்தால் லாபம் இல்லை : தயாரிப்பாளர் பதிலால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி
மாநாடு படத்தின் தயாரிப்பாளராக தனக்கு லாபம் கிடைக்கவில்லை என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளது சிம்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்த மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி ஒரு வழியாக கடந்த நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.
நீண்ட நாட்களுக்கு சிம்புவின் படம் வெளியானதால் இந்த படத்தை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் படம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
சிம்புவுக்கு இப்படம் சிறந்த கம்பேக் என அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் மாநாடு பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாடு படத்தை வாங்கிய அனைவரும் லாபம் அடைந்திருக்கிறார்கள். தியேட்டர் அதிபர்கள், சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய அனைவருக்கும் லாபம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபம் இல்லை என கூறியுள்ளார்.
அதற்கு காரணம் சிம்புவின் முந்தைய பட வசூலாகும். சிம்புவின் முந்தைய படம் வெற்றி பெற்றிருந்தால் எனக்கு லாபம் கிடைத்திருக்கும். ஆனால் மாநாடை அடுத்து வெளியாகும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு நிச்சயம் நல்ல லாபம் தான். எனக்கு லாபம் கிடைக்காமல் போனதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.