நான் ஆளுநராக வந்திருக்கிறேன் அரசியல்வாதியாக வரவில்லை - ஆளுநர் தமிழிசை
துாத்துக்குடி வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் கேள்விக்கு நான் ஆளுநராக வந்திருக்கிறேன் அரசியல்வாதியாக வரவில்லை என பேசினார்.
ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்திய தமிழிசை
சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒண்டிவீரன் நினைவு தபால்தலை மத்திய அரசு மூலமாக வெளியிடப்பட இருக்கிறது.
இதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தனர்.

பின்னர், காவல் துறை அணிவகுப்பு மரியாதையை தமிழக ஆளுநர், தெலுங்கானா ஆளுநர் ஏற்று கொண்ட பின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கட்சி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
பின்னர், பாஜக கலை இலக்கிய பிரிவு சார்பாக கிருஷ்ணர் திருவுருவ கொலு பொம்மை வழங்கபட்டது.
அரசியல்வாதியாக வரவில்லை
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், சுதந்திர அமிர்த பெருவிழா ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்னும் கொண்டாடப்படுகிறது. இது போன்று விழாக்கள் மூலமாகத்தான் வரலாற்றில் இருந்து அறியப்படாமல் உள்ள ஒதுக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் முழுமையான சரித்திரம் வெளியே வர வாய்ப்புள்ளது.
இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட விழாக்கள் தேவை. அதனால் தான் ஒண்டிவீரன் விழாவில் கலந்து கொள்ள இரண்டு ஆளுநர்கள் இங்கு வந்துள்ளோம். இப்படிப்பட்ட வீரர்களினால் தான் நாம் இன்று சுதந்திரமாக நடமாடிக் கொண்டு இருக்கிறோம்.
இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும். பாட புத்தகங்களில் இத்தகைய வீரர்களின் வரலாறு இன்னும் அதிகமாக இடம்பெற வேண்டும்.
என கூறிய அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து தங்களின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு?? நான் ஆளுநராக வந்திருக்கிறேன் அரசியல்வாதியாக வரவில்லை என்று கூறினார்.