பா.ரஞ்சித் யாரென்றே எனக்கு தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பதில்!
பா.ரஞ்சித் யாரென்றே தெரியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித்
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதாவது, “திமுகவிற்கு வாக்களித்தால் ஏதேனும் மாற்றம் வரும் என்று தான் வாக்களித்தேன்.
மக்களின் பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தான் 2021-இல் திமுகவுக்கு ஓட்டு போட்டேன். ஆனால் திமுக, அதிமுக எந்த ஆட்சி வந்தாலும் தலித் மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. தலித்துகளின் பிரச்சனைகள் இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதில் எங்களுக்கு பெரிய விமர்சனம் உள்ளது.
தமிழ்நாட்டில் ஆம்ஸ்ட்ராங்கின் நிலை மீண்டும் நீடித்தால், திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன். இது ஒரு எச்சரிக்கை. 2026-ல் எனது முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும்..? ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல கட்சிக்களுக்கு தொடர்பு உள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் சேகர்பாபு
குறிப்பாக அண்மையில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் மெட்ராஸில் எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்றும், எங்கள் பேச்சை ஆட்சியாளர்கள் கேட்கும் நிலை வரும் என்றும் கூறியிருந்தார். அதேநேரம் திமுகவுக்கு எதிராக பேசவில்லை என்கிற கருத்தையும் முன்வைத்தார்.
அவரது இந்த கருத்துக்கு அமைச்சர்கள், பிரபலங்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “பா.ரஞ்சித் யாரென்றே தமக்கு தெரியவில்லை.. அவர் அரசியல்வாதியாக இருந்திருந்தால் தமக்கு தெரிந்திருக்கும்” என்று கூறினார். அமைச்சரின் இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.