நான் இப்படி ஒரு நிலைமையில் இருக்க தோனி தான் காரணம் - உண்மையை சொன்ன பிரபல வீரர்
சென்னை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ட்வைன் பிராவோ பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தோனியை புகழ்ந்து பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.
அதில் சென்னை அணியைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைக்கப்பட்டுள்ளனர். சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, போன்றோர் கழட்டி விடப்பட்டனர்.
இதனிடையே ட்வைன் பிராவோ பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் பொழுது ஐபிஎல் தொடரில் தனது எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். அப்போது சென்னை அணி என்னை தக்க வைக்க வில்லை இருந்த போதும் நான் வருகிற 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் கலந்து கொள்வேன் என்றும்,அதில் எந்த அணி என்னை தேர்ந்தெடுக்கும் என்பது எனக்கு தெரியவில்லை, ஒருவேளை சென்னை அணி கூட மீண்டும் தேர்ந்தெடுக்கலாம் அல்லது வேறு ஏதாவது ஒரு அணி கூட என்னை தேர்ந்தெடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சென்னை அணி மற்றும் தோனி குறித்து பேசிய பிராவோ, நானும் தோனியும் வெவ்வேறு தாய்க்கு பிறந்த சகோதரர்கள் போல பழகி வருகிறோம். தோனி என்னுடைய உற்ற நண்பர் ஆவார். நான் தோனியுடன் சென்னை அணியில் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடி வருகிறோம்.தோனி என்னுடைய கிரிக்கெட் கேரியர் வளர்வதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தார் என்றும் பிராவோ தெரிவித்துள்ளார்.