அஜீத் சாருடன் நடிக்க ஐ எம் வெயிட்டிங் - நடிகை நஸ்ரியா
அடடே சுந்தரா திரைப்பட செய்தியாளர் சந்திப்பில் அஜித் சாருடன் நடிக்க எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயாராக தான் உள்ளேன் என்று நடிகை நஸ்ரியா கூறினார்
காதல் மற்றும் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள அடடே சுந்தரா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில், தெலுங்கு நடிகர் நானி, நாஸ்ரியா நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜுன் – 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை தி நகரில் நடைபெற்றது. இதில் நானி, நஸ்ரியா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அடடே சுந்தரா திரைப்படத்தின் நாயகன் நானி பேசுகையில், ஷியாம் சிங்கராய் படத்திற்கு பிறகு இந்த படம் வெளியாக உள்ளது. அடடே சுந்தரா திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு நிறைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகிறது. அதனால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்ய போதுமான நேரம் கிடைப்பதில்லை. அதனால் இறுதி வரை படத்தின் தயாரிப்பு பணிகள் நடப்பதால் கடினமாக உள்ளது என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் நாயகி நஸ்ரியா பேசுகையில், இந்த படத்தை உருவாக்கியபோது எங்களுக்கு இருந்த மகிழ்ச்சியை நீங்கள் படம் பார்க்கும்போது பெறுவீர்கள் என நம்புகிறேன்.நான் திட்டமிட்டு எந்த படத்திலும் நடிப்பதில்லை.
கதை எனக்கு பிடித்தால் அந்த படத்தில் நடிப்பேன், அதனால் தான் மீண்டும் தமிழில் நடிக்க நீண்ட காலம் ஆனது. அஜித் சாருடன் நடிக்க எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் நடிக்க தயாராக தான் உள்ளேன்.
காதல் திருமணம் பற்றி நாயகி நஸ்ரியாவிடம் கேட்டபோது, காதலுக்காக கடைசி வரை போராட வேண்டும் என்று கூறினார்.