வறுமை கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்த வயது முதிர்ந்த தம்பதி - திருவாரூரில் சோகச் சம்பவம்
திருவாரூர் வலங்கைமான், அருகே வறுமையால் மனவேதனை அடைந்த வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், மதகரம் கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (65). இவருடைய மனைவி சின்னாச்சி (57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் மிகுந்த வறுமையுடனும், ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்து வந்தனர்.
விஷம் குடித்து தற்கொலை
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர். ஆனாலும் உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் களைக்கொல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தம்பதியர் முருகையன், சின்னாச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.