மனைவிக்கு மேட்ரிமோனியில் வரன் தேடிய கணவன் - ஜெயிலுக்கு அனுப்பிய மாமனார்
திருவள்ளூர் அருகே மனைவியை பற்றி திருமண தகவல் மையத்தில் தவறான தகவல்களை பதிவிட்ட கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகளான சாப்ட்வேர் இன்ஜினியர் ஜான்சிக்கும், திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த ஓம்குமார் என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் தன் கணவனுடன் சென்று அங்கேயே தங்கி குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு நாலரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன் , மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓம் குமார் அமெரிக்காவிலிருந்து தன் மனைவியை விட்டு பிரிந்து சொந்த ஊரான திருவள்ளூரை அடுத்த வெள்ளியூருக்கு வந்தார்.
மேலும் ஓம்குமார் தனக்கு விவாகரத்து கேட்டு பூந்தமல்லியில் உள்ள சப்கோர்ட்டில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். தற்போது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதுவரையில் இவர்களுக்கு விவாகரத்து கிடைக்கவில்லை.
இந்நிலையில், பிரபல திருமண தகவல் மையத்தில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டுமென தகவல் கொடுத்து அதில் அவரது தந்தையான பத்மநாபன் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தவர்கள் ஜான்சியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து அவரது தந்தையான பத்மநாபனுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் இதுபோல் எந்த ஒரு திருமண தகவல் மையத்திலும் மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் செய்யவில்லை என தெரிவித்தார். எனினும், தொடர்ந்து போன் வந்ததால் விரக்தியடைந்த அவர் தனது பெயரில் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவலை பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் லில்லி, சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர் தாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம்குமார் தான் திருமண தகவல் மையத்தில் பொய்யான தகவல்களை பதிவிட்டு தன் மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என பொய்யான தகவல்களை பதிவிட்டிருந்தார் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் நேற்று ஓம்குமாரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.