செல்போனில் அதிக நேரம் பேச்சு : மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கொடூரம்
தூத்துக்குடி அருகே மனைவி செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த கணவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகரை சேர்ந்த சண்முகத்திற்கு முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் மாரியம்மாள் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு மாரிசெல்வி என்ற 19 வயது மகள் உள்ளார்.
மாரிச்செல்வியை தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த 27 வயதான கார் டிரைவர் பொன்ராஜுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கணவர் பொன்ராஜ் கண்டித்து வந்துள்ளார்.
இதனால் தம்பதியர் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து பொன்ராஜ், மனைவி மாரிசெல்வியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டு விட்டவதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு பின்னர் மனைவியை திரும்ப அழைத்து செல்லும்படி பொன்ராஜிடம் மாரிசெல்வியின் தாயார் கூறியபோது,
அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் பொன்ராஜ்.
இந்நிலையில், நேற்று இரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் இருவருடன் மனைவி வீட்டுக்கு சென்று திடீரென மனைவியை சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு
தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதில் மாரிச்செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபாமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாரிசெல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்ராஜ் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருககின்றனர்.