மனைவிக்கு தூக்க மாத்திரை - மயக்கத்தில் தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, மயக்கத்தில் அவரை தூக்கி சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்த கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
இத்தம்பதிக்கு வர்ஷினி என்கிற பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் மாமியார் வீட்டிற்கு சென்ற சத்தியமூர்த்தி கோவிலுக்கு போகலாம் என்று மனைவியை அழைத்து இருக்கிறார். கோவிலுக்கு தானே கூப்பிடுகிறார் என்று திவ்யாவும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது திவ்யாவுக்கு பால் வாங்கி கொடுத்திருக்கிறார் .
அந்த பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அறியாத திவ்யா அதை குடித்து விட்டார். பால் குடித்ததும் மயங்கிய திவ்யாவை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே தூக்கி சென்றிருக்கிறார்.
அங்கே அவர் மேல் பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். மயக்கத்தில் இருந்தாலும் பெட்ரோல் ஊற்றி உடல் எரிந்தபோது அலறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியிருக்கிறார் திவ்யா.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யா அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .
இதற்கிடையில் மனைவி தீ பற்றி எரிந்ததும் தப்பி ஓடிய சத்தியமூர்த்தி, தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டன. அதனால் இனி எங்களால் வாழ முடியாது.
அதனால் மனைவியை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். என்னை தேடாதீர்கள். என் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று வாட்ஸ்அப் மூலமாக உறவினர்களுக்கு வீடியோ அனுப்பி விட்டு தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் தேடி வருகின்றனர்.