சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட தகாத உறவு - கணவனை கொன்ற மனைவி
சேலத்தில் கணவரை கொன்றுவிட்டு நாடகம் நடத்திய மனைவியை அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் பிரபு என்பவர் சொந்த அக்கா மகள் ஷாலினியை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். வாழை இலை கடை வைத்துள்ள இவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதியன்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
வீட்டின் 2வது மாடியில் வசித்து வரும் பிரபுவை நள்ளிரவில் யாரோ 2 பேர் வந்து நகைகளை பறித்துக் கொண்டதோடு கொலை செய்துவிட்டு தப்பித்துவிட்டதாக முதல் மாடியில் இருந்த உறவினர்களிடம் ஷாலினி கூறியுள்ளார்.
ஆனால் மாடிக்கு செல்லும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளபோது எப்படி திருடர்கள் வரமுடியும் என்று பிரபுவின் பெற்றோர் கேட்டதற்கு ஷாலினி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த பிரபுவின் தாயார் துளசி அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்து பிரபுவின் உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் ஷாலினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சமூக வலைத்தளம் மூலம் தான் பல்வேறு ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாகவும், இதனால் எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் ஷாலினி கூறியுள்ளார்.
அவரது சமூக வலைத்தள பக்கங்களை ஆராய்ந்த போது திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த அப்பு என்கிற காமராஜ் என்பவருடன் ஷாலினி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிக்கியது. ஷாலினிக்கும் காமராஜுக்கும் இடையே கடந்த 1 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்ததும் இதற்கு இடையூறாக இருந்ததால் பிரபுவை கொல்ல இருவரும் திட்டம் போட்டுள்ளனர்.
அதன்படி பிரபு தூங்கிக்கொண்டு இருந்தபோது தலையாணை கொண்டு அவரது முகத்தில் அழுத்தி கொலை செய்ததை ஷாலினி ஒப்புக்கொண்டார்.இதையடுத்து துறையூர் விரைந்த அம்மாபேட்டை போலீசார் ஷாலினியின் கள்ளக்காதலனை கைது செய்து சேலம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.