என் கணவருக்கு ஓட்டுப் போடுங்க! களத்தில் இறங்கிய மனைவிகள்- சூடுபிடிக்கும் பிரசாரம்

india husband wife tamilnadu eelction
By Jon Mar 25, 2021 01:15 PM GMT
Report

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக அவர்களின் மனைவிகள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு வாக்காளர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், திமுக வேட்பாளராக அக்கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சம பலத்தில் வேட்பாளர்கள் இவர்களில் ப.குமார் ஏற்கெனவே 2 முறை எம்.பி.யாக இருந்தவர் என்பதாலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போதைய எம்எல்ஏவாக இருப்பதாலும் கட்சியினர் மற்றும் மக்களிடத்தில் செல்வாக்குடன் விளங்குகின்றனர். அரசியல் செல்வாக்கு, பண பலம் உள்ளிட்டவற்றில் சம பலத்துடன் இருப்பவர்கள் மோதுவதால், மாவட்டத்திலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும், இத்தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்களிடம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இருதரப்பும் பதிலடி பிரச்சாரம் எனவே அதிமுக, திமுக வேட்பாளர்கள் இருவரும் தங்களது பிரச்சாரத்தின்போது, ஒருவர் பேசுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மற்றொருவர் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், தேர்தல் வாக்குறுதி அளிப்பதிலும் ஒருவரையொருவர் போட்டிபோட்டுக் கொண்டு பல திட்டங்கள், சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு போட்டி போட்டு பணத்தைச் செலவிடுகின்றனர். இவர்களின் போட்டிக்குப் போட்டியால் திருவெறும்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் திருவிழாபோல களைகட்டியுள்ளது.

என் கணவருக்கு ஓட்டுப் போடுங்க! களத்தில் இறங்கிய மனைவிகள்- சூடுபிடிக்கும் பிரசாரம் | Husband Field Campaign Wife Election

கணவருக்குத் துணையாக ப.குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடையேயான போட்டி நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அவர்களின் களப் பிரச்சாரத்தின் வேகமும் சூடுபிடித்து வருகிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் வீதிவீதியாக வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக அவரது மனைவி ஜனனி மகேஷ், ப.குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி காயத்ரி ஆகியோரும் தற்போது தொகுதியில் களமிறங்கி தீவிர வாக்குச் சேகரிப்பைத் தொடங்கியுள்ளனர்.

ஆங்கிலத்தில் பேசி வாக்குச் சேகரிப்பு பி.இ. பட்டதாரியான ஜனனி மகேஷ், கடந்த சில தினங்களாக பழங்கனாங்குடி, காந்தலூர், பூலாங்குடி, கிளியூர், காட்டூர், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறார். மாநகரப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள பெண்களுடன் கூட்டாக அமர்ந்து பேசி திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வெளிமாநிலத்தவர் வசிக்கும் குடியிருப்புகளில் ஆங்கிலத்தில் பேசி ஆதரவு திரட்டுகிறார்.

உறவினர்களிடம் நலம் விசாரிப்பு இதேபோல பி.காம் பட்டதாரியான காயத்ரி குமார், சில தினங்களாக பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு, துவாக்குடி, நவல்பட்டு, கும்பக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்து வருகிறார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறார். மேலும், பிரச்சாரத்தின் இடையே, அப்பகுதிகளிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றும் ஆதரவு திரட்டி வருகிறார்.

பெரும்பாலான தொகுதிகளில் மனைவிக்கு ஆதரவாக கணவர், தந்தைக்கு ஆதரவாக மகன்கள், மகள்கள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இத்தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவரவர் இல்லத்தரசிகள் களமிறங்கியுள்ளது வாக்காளர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

- தி ஹிந்து தமிழ்  


  

Gallery