‘மனைவியும் மாமியாரும்தான் காரணம்’ - ஆடியோ பதிவிட்டு வாலிபர் தற்கொலை
விழுப்புரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பள்ளிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, இந்துமதி தம்பதியினருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், விநாயகமூர்த்தி மலேசியாவிலும், இந்துமதி மதுராந்தகம் அருகே உள்ள தனியார் கம்பெனியிலும் வேலை செய்து வந்தனர்.
இதனிடையே இந்துமதிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளதாக தகவலறிந்த விநாயகமூர்த்தி மலேசியாவிலிருந்து கடந்த ஜனவரி மாதத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இதுகுறித்து கேட்டபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 17ஆம் தேதி இந்துமதி தனது தாய்வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற விநாயகமூர்த்தி அவரின் கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்றுள்ளார்.
இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் விநாயகமூர்த்தியை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி வேலை செய்யும் நிறுவனத்திற்குச் சென்ற விநாயகமூர்த்தி குழந்தையை பார்க்க வேண்டும் என தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.
அப்போது மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மனமுடைந்த விநாயகமூர்த்தி, நேற்று மதியம் அவரது விவசாய நிலத்திற்கு சென்று செல்போனில், "தனது சாவுக்கு என் மனைவி மற்றும் மாமியார்தான் காரணம்" என ஆடியோ பதிவு செய்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
அதேசமயம் விநாயகமூர்த்தியின் தந்தை ஏழுமலை, தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.