‘நீ கற்புக்கரசி தான்’னா அதை நிரூபி’ - மனைவியை சித்திரவதை செய்த கணவனால் நேர்ந்த விபரீதம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் எழுத்ததால் கையில் கற்பூரத்தை ஏற்றி நிரூபனம் செய்ய சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தை அடுத்த வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இது குறித்து தனது மனைவியிடம் கூறிய ஆனந்த், சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி கற்புக்கரசி என மனைவியை நிரூபிக்க கேட்டுள்ளார்.
இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்கையில் கற்பூரத்தை ஏற்றி இருக்கிறார். அப்போது தீ கை முழுவதும் பரவி அவரது கை கருகிவிட்டது.
ஆனாலும் ஆனந்த் வலியால் துடித்த தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் ஆனந்தின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தலைமறைவாக உள்ள ஆனந்த் மீது வேம்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வலைவீசி தேடியும் வருகின்றனர்.