மனைவியை அடித்து கொன்ற கணவன் - விசாரணையில் வெளிவந்த நாடகம்
மும்பையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் தாராவி பகுதியை சேர்ந்த ராகுல் ஜெய்ஸ்வால் என்பவர் தனது மனைவி ரோஷினியுடன் வசித்து வந்தார். இவர் கடந்த வாரம் உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த ரோஷினியை சிகிச்சைக்காக அருகிலுள்ள சயான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அங்கு மருத்துவர்களிடம் தனது மனைவி வீட்டில் தவறி விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ரோஷினி மரணம் அடைந்தார். பின்னர் பிரேத பரிசோதனையில் இளம்பெண்ணுக்கு உள்காயங்கள் ஏற்பட்டு இருந்தது தெரியவந்ததால் மருத்துவர்கள் சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் இளம்பெண்ணின் கணவர் ராகுல் ஜெய்ஸ்வாலிடம் விசாரணை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ரோஷினி சந்தேகப்பட்டதால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை அடித்து கொலை செய்ததை ராகுல் ஜெய்ஸ்வால் ஒப்புக்கொண்டார்.
மனைவியை கணவனே அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் மும்பை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.