தீவிரம் அடைந்தது ‘அசானி’ புயல் - தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

asani cyclone
By Petchi Avudaiappan May 09, 2022 02:31 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

வங்க கடலில் உருவான ‘அசானி’ புயல் தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்ற நிலையில், இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவில் தீவிரம் அடைந்தது. இந்த புயலுக்கு ‘அசானி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

அசானி புயல் நாளை (மே10) மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலைக் கொண்டு,  அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று (மே9) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் நாளை முதல் மே 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த நிகழ்வால் சில பகுதிகளில் மழை பெய்தாலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தீவிர புயல் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கி.மீ. முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்திலும், மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.