மற்றொரு வேங்கைவயல் சம்பவம் - திருச்சி தண்ணீர் தொட்டியில் மனித மலம்
திருச்சியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கைவயல் சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி காவல்துறையினர், 3 நபர்கள் தான் இந்த வழக்கில் குற்றவாளி என புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி தண்ணீர் தொட்டி
பாதிக்கப்பட்ட சமூக மக்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் வேங்கைவயலில் நடந்தது போல் திருச்சியிலும் தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே 20வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர்.
விசாரணை
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது. இதையறிந்த வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்தார்.
உடனடியாக அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றி, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்திவிட்டு, அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடரை தூவி சென்றனர். தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றது யார் என திருச்சி மாநகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.