வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு விவகாரம் கண்டிக்கத்தக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேங்கைவயல் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அப்போது பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கண்டித்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மனித கழிவு கலந்த விவகாரம் எனது கவனத்திற்கு வந்தது.
தேவையான நடவடிக்கைகளை எடுக்கத அறிவுறுத்தியதை அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வேங்கைவயல் கிராமத்தில் இரண்டு குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மேலும் அந்த கிராமத்தில் இருந்து நோய் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், மக்கள் பயன்படுத்திடும் குடிநீரை பரிசோதனை செய்திட மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை ஆய்வு செய்த போது மனித கழிவு கலந்துள்ளது தெரியவந்தது என்றார்.
அதை தொடர்ந்து மருத்துவர்கள் குழு அந்த கிராமத்திற்கு சென்று நோய் தடுப்பு பணிகளையும், மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அந்த கிராமத்தில் பொது சுகாதார பணியினை மேற்கொள்வதற்காக வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ அலுவலர் 3 செவிலியர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள், 3 சுகாதார ஆய்வாளர்கள், 10 பணியாளர்கள் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.
கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்ட சுத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது குடிநீர் சுத்தமாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தற்போதைய குடிநீர் தேவைக்காக டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும்,
இது தொடர்பாக 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.