கிரீஸ் நாட்டில் சுமார் 2 கோடி ஆண்டுகள் பழமையான புதை படிவ மரம் கண்டுபிடிப்பு
கிரீஸ் நாட்டின் எரிமலைத் தீவான லெஸ்போஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் மற்றும் அதன் வேர்ப் பகுதிகள் உள்ளிட்ட புதைபடிவம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய தரைக் கடல் தீவான லெஸ்போஸில் உள்ள பெட்ரிஃபைட் காடு யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பகுதியில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பழமையான மரத்தின் புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புதை படிவமாகக் கிடைத்துள்ள இந்த மரத்தின் கிளைகள் மற்றும் வேர் பகுதிகள் ஆய்வுக்குரிய வகையில் நல்ல நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த புதைபடிவத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, இது எந்த வகையான தாவரத்திலிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும் என பெட்ரிஃபைட் வனத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியர் நிகோஸ் ஜூரோஸ் தெரிவித்திருக்கிறார்.
சுமார் 19 மீட்டர் நீளமுள்ள புதைபடிவ மரம், விழுந்த பின் எரிமலை வெடிப்பின் மூலம் ஏற்பட்ட சாம்பலால் அடுக்கினால் மூடப்பட்டுள்ளது.