பெண் உதவியாளரை முத்தமிட்ட எம்.பி. - அமெரிக்க அரசியலில் பரபரப்பு
அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளர் ஹுமா அபேதின், எம்.பி., ஒருவர் தன்னை முத்தமிட்டதாக தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் 2001 - 2009 கால கட்டத்தில் நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.யாக இருந்தார். அப்போது அவரது உதவியாளராக ஹுமா அபேதின் இருந்தார்.
அந்த சமயத்தில் வாஷிங்டனில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டு செனட் சபை எம்.பி., ஒருவருடன் ஹுமா வெளியே வந்திருக்கிறார். இருவரும் ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர். வழியில் அந்த எம்.பி.யின் வீடு வரவே அவர், ஹுமா அபேதினை வீட்டுக்குள் வந்து ஒரு காபி சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று அழைத்து இருக்கிறார்.
ஹூமாவும் அந்த அழைப்பை ஏற்று வீட்டுக்குள் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த எம்.பி. ஹுமா அபேதினுக்கு முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் அனைத்தையும், அவர் தான் எழுதியுள்ள ‘ போத்/அண்ட்: ஏ லைப் இன் மெனி வேர்ல்ட்ஸ்’ என்ற புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் நான் அவருடன் ஒரு சங்கடமான சூழ்நிலையில் இருந்தேன். அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவர் என்னை பாலியல் ரீதியில் தாக்கியதாக நான் உணர்ந்தேனா என்றால் அப்படி உணரவில்லை என ஹுமா அபேதின் தெரிவித்துள்ளார்.