சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட பிரம்மாண்ட கப்பல்! உலக வர்த்தகம் முடங்கும் அபாயம்

world ship Suez Canal stuck
By Jon Mar 26, 2021 01:32 PM GMT
Report

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று குறுக்கே சிக்கிக்கொண்டு நீர் வழித்தடம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், உலக வர்த்தகம் முடங்கும் அபாயமிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் மிக முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயில், எவர்கிவன் என்ற வணிகக் கப்பல் குறுக்கே சிக்கிக்கொண்டுள்ளது.

கால்வாயின் இரண்டு பக்க கரைகளின் சுவர்களிலும் மோதியபடி, பக்கவாட்டில் சிக்கிக்கொண்ட இந்த கப்பலால், செவ்வாய்க்கிழமை முதல் அந்த பாதையில் ஒட்டுமொத்த கப்பல் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த விபத்து உலக வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், சூயஸ் கால்வாய் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து தூரத்தை கணிசமாகக் குறைக்கிறது என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த திடீர் விபத்தினால் ஏராளமான சரக்கு கப்பல்கள் கால்வாயின் தென்பகுதியில் குவிந்துவருகின்றன. புதன் மாலை நேரம் வெளியான தகவலின் அடிப்படையில், சுமார் 100 சரக்கு கப்பல்கல் சூயஸ் கால்வாய் வழியாக கடந்து செல்ல காத்துக் கிடக்கின்றன. மேலும், இந்த அணிவகுப்பால் அந்தக் கடல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அனைத்து சர்வதேச கடல் வர்த்தகத்திலும் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாக செல்கிறது.

  சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட பிரம்மாண்ட கப்பல்! உலக வர்த்தகம் முடங்கும் அபாயம் | Huge Ship Stuck Suez Canal Paralysis World Trade

பிபிசியின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 50 கப்பல்கள் மொத்தம் ஒரு பில்லியன் டன் சரக்குகளுடன் கால்வாயைக் கடந்து செல்கின்றன. சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் புறப்பட்ட எவர்கிவன் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 7.40 மணியளவில் சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்தின் ரோட்டர்டாமுக்கு சென்றுகொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று வீசிய பலத்த காற்றால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, முன்பக்கம் கால்வாயின் வடக்குபக்க சுவற்றின் மீது மோதியது. அடுத்தகணமே கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு மற்றொருபக்க சுவரில் மோதி நின்றது. கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சூயஸ் நிர்வாகம் கூறி உள்ளது. இதனிடையே, கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் 20 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.