தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எப்படி செயல்படுத்தும்? - ஓ. பன்னீர்செல்வம் கேள்வி
அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது? என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்றைய சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
சட்டப்பேரவை நிறைவடைந்ததை தொடர்ந்து தேனி மாவட்டத்திற்குச் செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக் கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும் என கூறினார்.
மேலும், மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்று கேட்டதற்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது? என கேள்வி எழுப்பினார்.